பொள்ளாச்சி:

துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் பாதுகாவலர் ஒருவருக்கு  கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்த நிலையில், பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என தகவல்கள் பரவிய நிலையில், எனக்கு  தொற்று இல்லை என்று, தான் தனிமைப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி உள்ளது. இதனால் ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பொள்ளாச்சி பகுதியில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சிகளின்போது, பொள்ளாச்சி ஜெயராமனுடன் அவரது பாதுகாவலர்களும் உடன் செல்வது வழக்கம். இநத நிலையில், அவரது பாதுகாவலர்களில் ஒருவரான  சுல்தான்பேட்டை அருகே உள்ள கள்ளப்பாளையம் பகுதியை சேர்ந்த 56 வயது போலீஸ்காரர் ஒருவர் சளிக்காய்சசலால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த போலீஸ்காரர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

இதையடுத்து, அவருடன் பணியாற்றி வந்த சக பாதுகாப்பு காவலர்கள் மற்றும்   துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அவரது குடும்பத்தினர் என பலருக்கு ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில்  யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதுதெரிய வந்தது. இதற்கிடையில் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா என செய்திகள் சமூக வலைதளங்களில்  பரவி வந்தன.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த  பொள்ளாச்சி ஜெயராமன்,  எனக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸ்காரர் 4 நாள் விடுமுறைக்கு பின்பு மீண்டும் பணிக்கு வந்தார். அப்போதுதான் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில்அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  அவருடன் தொடர்பில் இருந்த எனக்கும் கொரோனா தொற்று சோதனை செய்யப்பட்டது. இதில் எனக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்தது.

எனக்கு கொரோனா தொற்று என பரவிய செய்தி வதந்தி , என்னை யாரும் தனிமைப்படுத்தவில்லை,  நான் எனது வழக்கமான பணிகளை செய்து வருகிறேன் என்று பரபரப்பாக விளக்கம் அளித்துள்ளார்.

பொள்ளாச்சி ஜெயராமனின் பரபரப்பான மறுப்பு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப்போலத்தான் உள்ளது…