’பிக் பாஸ்‘’ சொன்னால் பிக் பஜாரில் மளிகை சாமான்
இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், இந்தியாவில் உள்ள அனைத்து சினிமா தொழிலாளர்களுக்கும் உதவ முன் வந்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக வேலை இழந்து வறுமையில் வாடும் ஒவ்வொரு தினக்கூலி தொழிலாளர்களுக்கும் தனது பணம் போய்ச் சேர வேண்டும் என விரும்பிய அமிதாப்., இதனைச் செயல்படுத்த கல்யாண் ஜுவல்லர்ஸ், பிக்பஜார் உள்ளிட்ட நாடு தழுவிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்.
அண்மையில் அவர், தெலுங்கு சினிமா தொழிலாளர்கள் 12 ஆயிரம் பேர் ,பயன் பெறும் வகையில் இலவச கூப்பன்களை, நடிகர் சிரஞ்சீவிக்கு அனுப்பியுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சினிமா தொழிலாளர்களுக்கு உதவ சிரஞ்சீவி தலைமையில் ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த இலவச கூப்பன்களை சிரஞ்சீவிக்கு அமிதாப் அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்த கூப்பன்களை கொண்டு, பிக்பஜார் கடையில் , சினிமா தொழிலாளர்கள் பொருட்கள் வாங்கி கொள்ளலாம்.
அமிதாப்பச்சன் வழங்கிய கூப்பன்களை, நிஜமாகவே கஷ்டப்படும் தொழிலாளர்கள் யார்? யார்? என ஆய்வு செய்து அவர்களுக்குக் கொடுக்க திட்டமிட்டுள்ளார், சிரஞ்சீவி.
‘பிக் பாசுக்கு’ நெட்டிசன்கள், பாராட்டு மழை பொழிந்த வண்ணம் உள்ளனர்.
– ஏழுமலை வெங்கடேசன்