கங்கணா, ரங்கோலி என இருவருமே வெளிப்படையான பாஜக ஆதரவாளர்கள்.சர்ச்சைக் கருத்துகளுக்கு பிரபலமானவர்கள் இருவரும் .
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தேர்தல் இல்லாமல் மீண்டும் நேரடியாக பிரதமராகத் தேர்ந்தெடுப்போம் என்று கூறி கடும் விமர்சனத்துக்கு ஆளானார்.
இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாக்கிப் பதிவிட்டதாக ரங்கோலியின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிர்வாகம் முடக்கியுள்ளது. பலரும் அளித்த புகாரின் பேரில் ட்விட்டர் நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ரங்கோலியின் சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவுக்கு பாலிவுட் பிரபலங்கள், நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது தொடர்பாக கங்கணாவின் சகோதரி ரங்கோலி கூறியிருப்பதாவது:
“ட்விட்டர் என்பது அமெரிக்கத் தளம். முற்றிலும் ஒருதலைப்பட்சமானது, இந்தியாவுக்கு எதிரானது. இந்துக் கடவுள்களைக் கிண்டல் செய்யலாம், பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சரை தீவிரவாதிகள் என்று கூப்பிடலாம், ஆனால் சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை மீது கல்லடிப்பவர்களைப் பற்றி ஏதாவது சொன்னால் உங்கள் கணக்கை ரத்து செய்துவிடுவார்கள்.
எனது பார்வை மற்றும் நேர்மையான அபிப்ராயங்களோடு அதுபோன்ற தளங்களுக்கு இனியும் முக்கியத்துவம் கொடுக்க எனக்கு ஆசையில்லை. எனவே நான் எனது கணக்கை மீட்டெடுக்கப் போவதில்லை. நான் எனது சகோதரியின் செய்தித் தொடர்பாளராக இருந்தேன். இனி அவரது நேரடிப் பேட்டிகளைப் பாருங்கள். அவர் ஒரு பெரிய நட்சத்திரம், உங்களைச் சென்றடைய அவருக்கு நிறைய வழிகள் உள்ளன. ஒருதலைப்பட்சமான ஒரு தளத்தை எளிதாக நிராகரிக்கலாம்”.
இவ்வாறு ரங்கோலி தெரிவித்துள்ளார்.