1700 கி.மீ.சைக்கிள் பயணம் வெறுக்கவைத்த கிளைமாக்ஸ்..
ஒடிசா மாநிலம் ஜாய்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் ஜேனா, மகாராஷ்டிராவில் உள்ள சங்லி மிராஜ் பகுதியில் இரும்பு பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.
மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம்.
கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட- அவர் வேலை பார்த்த பட்டறைக்கு மூன்று மாதம் ‘விடுமுறை’ அளிக்கப்பட்டது.
அப்போது ஜேனாவின் கையில் 3 ஆயிரம் ரூபாய் தான் இருந்தது.
மாதம் தோறும் சாப்பாடு மற்றும் ரூம் வாடகைக்கு 6 ஆயிரம் ரூபாய் தேவை.
இங்கே பட்டினி கிடந்து சாவதை விட சொந்த ஊருக்குச் செல்வதே உசிதம் என நினைத்தார்.
முட்டாள்கள் தினமான ஏப்ரல் முதல் தேதியில், புத்திசாலித்தனமாக –
சைக்கிளில் சொந்த ஊருக்குச் செல்வது என முடிவு எடுத்துக் கிளம்பினார்.
சூரியன் சுட்டெரிக்காத காலை வேளையில் பயணம்.
பின்னர் நிழல் கண்ட இடத்தில் ஓய்வு மற்றும் உணவு.
மாலையில் மீண்டும் பயணம்.
நான்கு மாநிலங்களைக் கடந்து 7 நாட்களில் சொந்த ஊர் வந்து சேர்ந்தார்.
வேலை பார்த்த இடத்தில் இருந்து, அவரது ஊர்- 1,700 கி.மீ.
நாளொன்றுக்கு 200 கி.மீ. தூரம் சைக்கிளில் பெடல் போட்டு, 7 நாட்கள் பயணத்தில் கிராமத்தை அடைந்தவருக்கு அதிர்ச்சி.
‘ஊருக்குள் அனுமதிக்க மறுத்து விட்டனர், சொந்த ஜனங்கள்.
மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் கொடுத்தனர்.
விளைவு?
ஊர் எல்லையில் உள்ள பள்ளியில் 14 நாள் தனிமையில் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தனிமையில் இருக்கிறார், ஜேனா.