டெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம்  நடத்திய ஆலோசனையின்போது, பல்வேறு மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு 14ந்தேதியுடன் முடிவுக்கு வருகிறது. ஆனால், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தற்போது தான் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதானால், ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  பல மாநில முதல்வர்களும் நீட்டிக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மூன்றாவது முறையாக கலந்தாய்வு மேற்கொண்டார்.

கலந்துரையாடலின் மோடி பேசியதாவது:–

நான் வாரத்தின் 7 நாட்களும் 24 மணிநேரமும் அதாவது எந்த நேரத்திலும் பணியில் தான் இருக்கிறேன். எந்த முதல்வரும் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொண்டு பேசலாம், கொரோனா குறித்து பரிந்துரைகளை வழங்கலாம். நாம் தோளோடு தோள் கொடுத்து ஒன்றாக நிற்க வேண்டும்.

இவ்வாறு மோடி பேசினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை ஏப்ரல் 30ந்தேதி வரை நீட்டிக்குமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், மகாராஷ்டிராவின் உத்தவ் தாக்கரே, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாய் போன்றோர் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எடப்பாடி பேசியது என்ன?

இந்த ஆலோசனையின்போது பேசிய தமிழக முதல்வர், தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் இதற்கு தேவைப்படும் மத்திய அரசின் உதவி ஆகியவற்றை எடுத்துரைத்ததாகவும், தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ. 1000கோடியை வழங்க வேண்டும் என  பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், ஊரடங்கு தொடர்பாக மத்தியஅரசு எடுக்கும் முடிவுக்கு தமிழக அரசு கட்டுப்படும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

முதல்வருடன்,  மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்  சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், காவல்துறை தலைமை இயக்குநர் ஜெ.கே. திரிபாதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில்  நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை நீட்டிக்க பெரும்பாலான முதல்வர்கள் ஆதரவு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால், ஊரடங்கு இந்த மாதம் இறுதி வரை நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.