டெல்லி:

கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள், வென்டிலேட்டர்கள், மாஸ்க்குகள் போன்ற மருத்துவ அத்தியாவசியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்வதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. தற்போது 3வது கட்டத்துக்கு வைரஸ் பரவல் நகரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் அதன் தாக்கம் பயங்கரமாக இருக்கும். இதனால் நோய் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதனால், மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்களுக்கு  பாதுகாப்பு உபகரணங்கள், கொரோனா பரிசோதனை கருவிகள், வென்டிலேட்டர்கள், மாஸ்க்குகள், மற்றும் அறுவைசிகிச்சை மாஸ்க்குகள்  தேவை அதிகரித்து உள்ளது. இதனால் பல நாடுகளில் இருந்து அவைகள் இறக்குமதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அத்தியாவசிய பொரட்கள் இறக்குமதி செய்வதற்கான சுங்கவரி மற்றும் சுகாதார செஸ் வரி ஆகியவற்றை மத்திய அரசு நீக்கி அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், வென்டிலேட்டர் மற்றும் பிற பொருட்களின் உடனடி தேவையை கருத்தில் கொண்டு, அவற்றை இறக்குமதி செய்ய சுங்க வரி மற்றும் சுகாதார செஸ்வரி ஆகியவற்றில் இருந்துவிலக்கு அளிக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த சலுகை செப்டம்பர் மாதம்  30ந்தேதி  வரை மட்டுமே.

மேலும், உள்நாட்டிலேயே கொரோனா பாதுகாப்பு கருவிகள் தயாரிக்க தேவைப்படும் பொருட்களை இறக்குமதி செய்யும் போது, அவற்றின் மீதான சுங்கவரி மற்றும் செஸ் வரி ஆகியவற்றில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மருத்துவ துறைக்கு தேவையான 80 சதவீத பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு செஸ் வரியாக 5 சதவீதமும், சுங்க வரியாக 7.5 சதவீதமும் வசூலிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முகக்கவசம், வெண்டிலெட்டர்கள், பாதுகாப்பு உடைகளுக்கு கலால் வரியில் இருந்து விலக்கு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.