ராமநாதபுரம்: கீழக்கரை முதியவருக்கு கொரோனா தொற்று சோதனை செய்ததில், ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக நவாஸ் கனி எம்பி குற்றம் சாட்டி இருக்கிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த 71 வயது முதியவர், கொரோனா அறிகுறியுடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த 2ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அவர், துபாய் சென்று வந்த நிலையில், சுகாதாரத்துறை சார்பில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால், சிலமணி நேரங்களிலேயே அவர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
இதையடுத்து, முதியவரின் உடல், அமரர் ஊர்தி மூலம் சொந்த ஊரான கீழக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த வாகனத்தை பின்தொடர்ந்து உறவினர்கள் 10 பேர் தனி வாகனங்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டது.
முதியவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்டோர் தனிமனித விலகலை கடைப்பிடிக்கவில்லை. இந்நிலையில், முதியவரிடம் ஏற்கனவே எடுக்கப்பட்ட ரத்த மாதிரியில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது 3 நாட்களுக்குப் பின் தற்போது தெரியவந்து இருக்கிறது.
இந்த விவகாரம் இப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இறந்த முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பதை ஸ்டான்லி மருத்துவர்கள் உறுதி செய்தி இருக்கின்றனர்.
அதனால், உயிரிழந்த முதியவரின் குடும்பத்தினர், இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தும் முயற்சியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
முதியோரின் வீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள 5 தெரு பாதைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன. போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.
இந் நிலையில், கீழக்கரை முதியவருக்கு கொரோனா தொற்று சோதனை செய்ததில், ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் காட்டியதாக நவாஸ் கனி எம்பி குற்றம் சாட்டி இருக்கிறார்.
இது குறித்து அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: கொரோனா தொற்றால் முதியவர் உயிரிழந்திருப்பதால் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
கொரோனா தொற்று சோதனை செய்ததில், ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் காட்டி உள்ளனர். கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டவர் இறந்த நிலையில், அவரின் ரத்த மாதிரி சோதனையை உறுதி செய்த பின்னர், உடலை உறவினர்களிடம் ஒப்படைத்து இருந்தால், இதுபோன்ற அச்சத்தை தவிர்த்து இருக்கலாம்.
இது மிகப்பெரிய அலட்சியம், இந்த அலட்சிய போக்குடன் செயல்பட்டால் அதற்கு நாம் பெரும் விலையை கொடுக்க வேண்டியிருக்கும். எனவே அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி துரிதமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.