ஹைதராபாத்:

ரடங்கு உத்தரவு காரணமாக போக்குவர்து முடங்கியுள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை நோக்கி நடைபயணமாக கிளம்பிய தொழிலாளி, தெலங்கானாவின் செகந்திராபாத்தில் உயிரிழந்துள்ளார்.

23 வயதாகும் லோகேஷ் பாலசுப்ரமணி என்ற அந்த தொழிலாளி நாக்பூரில் இருந்து 500 கிலோ மீட்டர் தூரத்தை நடைபயணமாக கடந்துள்ளார். நாட்டின் பல மாநிலங்களில் கூலித்தொழிலாளர்களாக பல்வேறு மாநிலத்தவர் பணியாற்றி வருகின்றனர். 21 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் உணவின்றி தவிக்கும் அவர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த சிலர் மகாராஷ்டிர மாநிலத்தில் கூலித்தொழிலாளிகளாக பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 26 பேர் ஒரு குழுவாக தமிழகத்திற்கு நடைபயணமாக புறப்பட்டுள்ளனர். தெலங்கானாவின் செகந்திராபாத் வழியே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, நாமக்கல்லை சேர்ந்த லோகேஷ் சுப்ரமணி என்ற தொழிலாளி உயிரிழந்தார். உயிரிழந்த லோகேஷ் சுப்ரமணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

முன்னதாக தொழிலாளர் குழுவினர் போவன்பள்ளி சந்தையில் நின்றுள்ளனர். அவர்களை உள்ளூர் பிரமுகர்கள் மேற்கு மாரட்பள்ளியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்துள்ளனர். அங்கு ஏற்கனவே 176 பேர் இருந்தனர். இந்த நிலையில், அங்கிருந்த லோகேசுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அரசு மருத்துவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் வருவதற்குள்ளாக லோகேஷின் உயிர் பிரிந்துள்ளது.

கடந்த 3 நாட்களாக நாக்பூர் – தெலங்கானா இடையே 38 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியுள்ளது. நடைபயணமாக வந்தவர்கள் அனைவரும் குறைந்தது ஒரு பையை சுமந்து வந்துள்ளனர். உயிரிழந்த லோகேஷின் உடல் ஐதராபாத்திலேயே தகனம் செய்யப்படவிருந்தது. பின்னர், உள்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டதில், லோகேஷின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.