திருப்பூர்:

‘வீடு தேடிவரும் காய்கறிகள்’ என்னும் அசத்தல் திட்டம் திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

ஊரடங்கு உத்தரவு காலத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியே வருவதை தடுக்கும் நோக்கில், திருப்பூர் மாநகரில் ‘வீடு தேடிவரும் காய்கறிகள்’ திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும் என்று அந்த மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருப்பினும் காய்கறிகள், மருந்து, மாத்திரைகள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க தடைவிதிக்கப்படவில்லை.

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் அத்தியாவசிய பொருள்களை வாங்க மக்கள் வெளியே வருவதற்கும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி காலை 6 மணி முதல் மதியம் 2:30 மணி வரை மட்டுமே காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் உள்ளிட்டவை இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த குறிப்பிட்ட நேரத்திலும் பொதுமக்கள் சந்தைக்கு வருவதை தவிர்க்கும் பொருட்டு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அசத்தலான திட்டத்தை இன்று  முதல் செயல்படுத்த உள்ளது.

வீடு தேடிவரும் காய்கறிகள் என்னும் இந்தத் திட்டத்தின்படி, 30 ரூபாய்,, 50 ரூபாய், 100 ரூபாய் என மூன்று தொகுப்புகளாக காய்கறிகள் பேக் செய்யப்பட்டு, நுகர்வோரின் வீடுகளை தேடி சென்று விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.