சென்னை: ரேஷன் கடைகளில் கொரோனா வைரஸ் நிவாரணத் தொகை ஏப்ரல் 2ம் தேதியான இன்று முதல் வழங்கப்படுவதால் எந்தப் புகாரும் ஏற்படாதபடி கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு, மாநில கூட்டுறவு மற்றும் உணவுத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மார்ச் 25 முதல் இம்மாதம் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் வேலைக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

அவர்களுக்கு உதவும் வகையில் கொரோனா வைரஸ் தடுப்பு கால நிவாரணமாக அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.1000 ரொக்கத்துடன் ஏப்ரல் மாதத்திற்கு உரிய அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை இலவசமாக வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

அந்த உதவிகள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் இன்று முதல் ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்படவுள்ளன. ஒரு கடையில் 1300 முதல் 1500 அட்டைதாரர்கள் உள்ளனர். நிவாரணம் வழங்கும்போது கடைகளில் கூட்டம் சேரக் கூடாது என்பதற்காக எந்தத் தேதி மற்றும் நேரத்தில் வர வேண்டும் என்ற டோக்கன்களை அட்டைதாரர்களின் வீடுகளுக்கு ரேஷன் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் வழங்கியுள்ளனர்.

ஒவ்வொரு கடையிலும் தினமும் தலா 100 அட்டைதாரர்கள் என ஏப்ரல் மாதம் 15ம் தேதி வரை 35 ஆயிரத்து 244 கடைகள் வாயிலாக 2.01 கோடி அட்டைதாரர்களுக்கு கொரோனா வைரஸ் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் குறிப்பிட்ட துாரத்திற்குள் அட்டைதாரர்களை நிற்க வைப்பதற்காக அடையாளக் குறியீடுகளும் வரையப்பட்டுள்ளன.