லண்டன்: இரண்டாம் உலகப்போர் காலகட்டத்திற்குப் பிறகு, தற்போது கொரோனா காரணமாக முதன்முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்துசெய்யப்பட்டுள்ளதானது தன்னை மிகவும் கதிகலக்கி விட்டதாக தெரிவித்துள்ளார் முன்னாள் சாம்பியன் ரோஜர் ஃபெடரர்.
மிகப்பழமையான டென்னிஸ் தொடரான விம்பிள்டன் டென்னிஸ் தொடர், ஏப்ரல் 1ம் தேதி ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்த பிரிட்டனையும் தற்போது கொரோனா வைரஸ் உலுக்கி வருகிறது. அந்நாட்டின் பிரதமர், அமைச்சர் மற்றும் பட்டத்து இளவரசர் சார்லஸ் உள்ளிட்டோரும் தப்பவில்லை.
இந்த ரத்து நடவடிக்கையால் விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை மொத்தம் 7 முறை வென்ற செரினா வில்லியம்ஸும் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்தாண்டு ஜுன் மாதம் 29ம் தேதி தொடங்கி, 2 வாரங்கள் நடத்தப்படுவதாக இருந்தது இப்போட்டித் தொடர்.
நோவக் ஜோகோவிக் மற்றும் சிமோனா ஹேலப், தற்போதைய ஒற்றையர் பட்ட சாம்பியன்களாவர். கடந்த 1877ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டுவரும் இப்போட்டித் தொடரை, தற்போது உலகை உலுக்கியெடுத்துவரும் கொரோனா வைரஸ் காரணமாக ரத்துசெய்வதாய் இங்கிலாந்தின் அனைத்து கிளப் தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.