சிட்னி: ரஷ்யாவின் ராணுவப் போக்குவரத்து விமானம் ஒன்று, கொரோனா வைரஸ் எதிர்ப்பு மருத்துவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இருந்து வருகிறது அமெரிக்கா. அதிக நோயாளிகள் அந்நாட்டில்தான் உள்ளனர். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பலி எண்ணிக்கை பல்லாயிரங்களைக் கடந்து சென்று கொண்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவுடன் பல விஷயங்களில் சின்ன சின்ன முட்டல்-மோதல்களில் ஈடுபட்டுவரும் ரஷ்யா, கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக அமெரிக்காவுக்கு உதவ முன்வந்துள்ளது.
முகமூடிகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு, அந்நாட்டின் ராணுவப் போக்குவரத்து விமானம் ஒன்று, அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ரஷ்யாவின் இந்த நடவடிக்கையானது, சர்வதேச அரசியலில் அதன் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சிதான் என்றும், எனவே, புடின் விஷயத்தில் டிரம்ப் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும் சில டிரம்ப் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.