லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவுக்கு முதன் முறையாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பஸ்தி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் பலியாகி இருக்கிறார். கோரக்பூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது பஸ்தி. அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அந்த இளைஞர் சேர்க்கப்பட்டு இருந்தார்.

அவரை கடந்த 28ம் தேதி உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவருக்கு சுவாச பிரச்னைகள் இருப்பதாக மருத்துவர்களிடம் அவர்கள் கூறினர். ஆனால் அப்போது அந்த இளைஞர் மும்பைக்கு சென்று திரும்பியதை மறைத்திருக்கின்றனர்.

இதையடுத்து அவரை பொது நோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்து இருக்கின்றனர். அவர் இப்போது இறந்துவிட்டதால் மற்றவர்களுக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இது குறித்து மருத்துவமனையின் இயக்குநர் ஓ.பி. சிங் கூறி இருப்பதாவது: அந்த நபர் தாம் எங்கு பயணித்தோம் என்பது பற்றி எந்த தகவலும் கொடுக்கவில்லை. இது நோயாளி மற்றும் அவரது உறவினர்களின் தவறு. அவர் ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், அந்த நேரத்தில் காய்ச்சல் இல்லை என்றும் கூறினார். எனவே அவர் பொது வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

மும்பையில் இருந்து திரும்பி வந்ததாக ஒரு முறை அவரோ அல்லது அவரது உறவினர்கள் கூறியிருந்தால், நாங்கள் உடனடியாக அவரை கொரோனா வைரஸ் வார்டுக்கு அனுப்பியிருப்போம் என்றார்.

அந்த நபர் உண்மையில் மும்பையில் இருந்து சமீபத்தில் திரும்பி வந்ததை உத்தரப்பிரதேச அரசு உறுதிப்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அந்த நபர் பஸ்தியில் உள்ள மருத்துவமனையில் இருந்து கோரக்பூரில் உள்ள ஒரு உயர்  சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அதன் பிறகு அவர் இறந்தார். பின்னர் அவரது உடல் இறுதி சடங்குகளுக்காக பஸ்திக்கு கொண்டு வந்த உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பஸ்தி மாவட்ட நிர்வாகம் இப்போது அவர் வாழ்ந்த பகுதியை சீல் வைத்துள்ளது.

பஸ்தி மற்றும் கோரக்பூர் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் இருப்பதால், அவர் தொடர்பு கொண்ட அனைத்து உறவினர்களும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.