டில்லி

டில்லி நிஜாமுதின் நிகழ்வில் கலந்துக் கொண்ட 800 இந்தோனேசிய இஸ்லாமிய மத  போதகர்களுக்கு இந்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் டில்லி நிஜாமுதின் பகுதியில் உள்ள பங்க்ளே வாலி மசூதியில் நடந்த ஒரு மத நிகழ்வில் தப்லிகி சபையைச் சேர்ந்த பலர் கலந்துக் கொண்டனர்.   இந்த சபையின் தலைமையகம் இந்த மசூதி என்பதால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர் உள்ளிட்ட பல இஸ்லாமிய மத போதகர்கள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டவர்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   இதற்கு இந்த நிகழ்வில் வெளிநாட்டில் இருந்து வந்த மத போதகர்கள் காரணம் என தெரிய வந்துள்ளது.  இந்த மாநாட்டுக்கு இந்தோனேசியாவில் இருந்து 800 பேர் வந்துள்ளனர்.

இந்தோனேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள ஒப்பந்தப்படி சுற்றுலா விசாக்களை இங்கு வந்து பயணிகள் பெற்றுக்கொள்ளலாம்.  இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட 800 இந்தோனேசிய மத போதகர்களும் சுற்றுலா விசாவில் வந்து நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு விசா விதிமீறல் செய்துள்ளனர்.

அதன்பிறகு அவர்கள் மத கூட்டங்களில் கலந்துக் கொள்ளப் பல குழுக்களாகப் பிரிந்து தெலுங்கானா, பீகார்,உபி, ஆந்திரா, ஒரிசா, காஷ்மீர் உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்றுள்ளனர்.  இவர்கள் சென்ற இடம் எல்லாம் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.   நிஜாமுதின் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்களில் தெலுங்கானாவில் 7 பேரும் ஸ்ரீநகரில் ஒருவரும் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் கொரோனா எச்சரிக்கைக்கு முன்பே இந்தியாவுக்குள் வந்துள்ளதால் இவர்களுக்கு விமான நிலையத்தில் சோதனை நடக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  இந்தோனேசியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்து மத நிகழ்வுகளில் கலந்து விதிமீறல் செய்துள்ளதால் இந்த 800 இஸ்லாமிய மத போதகர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.