டெல்லி: தலைநகர் டெல்லி, உத்தர பிரதேசத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களை தனிமைப்படுத்த 5 நட்சத்திர ஹோட்டல்கள் அரசு செலவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது.
கொரோனா அறிகுறியுடன் இருக்கும் நபர்களை தனிமைப்படுத்தும் பணியை மாநில அரசுகள் களம் இறங்கி செயலாற்றி வருகின்றன. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தனி வார்டுகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். அதற்காக அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை தனிமைப்படுத்த 5 நட்சத்திர ஹோட்டல்கள் அரசு செலவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள எல்என்ஜேபி மற்றும் ஜிபி பந்த் மருத்துவமனை மருத்துவர்கள், அங்குள்ள லலித் சொகுசு ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.
அரசு சார்பில் அதற்காக 100 அறைகள் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தை பொறுத்தவரை, லக்னோவில் உள்ள ஹையாத் ரீஜென்சி, பேர்பீல்டு மற்றும் லெமன் ட்ரீ உள்ளிட்ட ஹோட்டல்கள் அரசு சார்பில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் இங்குள்ள அறைகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதற்கான செலவை அம்மாநில அரசே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.