சென்னை:

மிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 21வயது இளைஞர், குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். இதை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபடுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் அயர்லாந்து நாட்டில் இருந்து சென்னை திரும்பிய 21 வயது இளைஞர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்றுவந்தார்.

தற்போது அந்த இளைஞருக்கு குணமாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

மேலும்,  சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.