டில்லி

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கால் ஏற்படும் பொருளாதார  பாதிப்பைச் சீர்படுத்த ப சிதம்பரம் 10 ஆலோசனைகள் வழங்கி உள்ளார்

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்று தற்போது 2ஆம் கட்டத்தில் உள்ளது.  அது மூன்றாம் கட்டத்தை அடையும் முன்பு கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை நேற்று பிரதமர் மோடி அறிவித்தார்.   இதையொட்டி முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் 10 ஆலோசனைகள் வழங்கி உள்ளார்

ப சிதம்பரம் ” கொரோனா வைரஸின் தாக்கத்தால் நாட்டை பொருளாதாரத்தைச் சிக்கலில் இருந்து மீட்க 10 வகையான ஆலோசனைகளை வழங்கி இருக்கிறேன். அரசு இதை பரீசலனைக்கு எடுத்துக்கொண்டு உடனடியாக அமல்படுத்த வேண்டும். தற்போதைய சூழலில் ஏழை மக்கள் கையில் உடனடியாகப் பணத்தை வழங்க வேண்டியது அவசியமாகும்.

உடனடியாக ஏழைகள், விளிம்பு நிலை மக்கள், விவசாயத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் ஆகியோரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வேண்டும்.  அத்துடன் அனைத்து வகையான பொருட்கள், சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதத்துள்ளாகக் கொண்டுவந்து ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நுகர்வை அதிகப்படுத்த வேண்டும்.

முதலாவதாக இப்போதுள்ள வேலை வாய்ப்பையும், ஊதியத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஏழை மக்கள், விளிம்பு நிலை சமூகத்து மக்களின் கைகளில் பணம் புழங்க வேண்டும்.

பிரதமர் விவசாயிகள் (கிசான்திட்டம்) திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதை இரு மடங்காக்கி ரூ.12 ஆயிரத்தை விவசாயிகள் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த வேண்டும்.

கிசான் திட்டத்தில் இல்லாத விவசாயிகள், அதாவது குத்தகை நிலத்தில் உழும் விவசாயிகளையும் இதில் இணைக்கக் கோரி மாநில அரசுகளிடம் கூற வேண்டும். அவர்களுக்கும் இரு தவணைகளாக ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் அனைத்து பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கும் வங்கிக் கணக்கில் ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும்.

நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு ஜன்தன் வங்கிக் கணக்கு மூலம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். அதோடு ரூ.10 கிலோ அரிசி அல்லது கோதுமையை அடுத்த 21 நாட்களுக்கு ஒவ்வொரு ரேஷன் அட்டை வைத்திருப்பவருக்கும் வழங்கிட வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர்களையும், அவர்களின் ஊதியத்தையும் குறைக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வார்டு வாரியாக, மண்டல வாரியாக பதிவேட்டை உருவாக்கி வங்கிக் கணக்கில் பணம் பெறாதவர்களை அழைத்து அவர்களுக்குப் பணம் வழங்கிட வேண்டும்.

இந்தத் திட்டத்தில் வீடில்லாமல் சாலையில் வசிப்பவர்களுக்கும் பணம் வழங்கிட வேண்டும்.

குறைந்தபட்ச விசாரணையுடன், ஆவணங்களுடன் அனைவருக்கும் வங்கிக் கணக்கு உருவாக்கி, அதில் ஆதார் அடிப்படையில், ஒவ்வொரு கணக்குதாரருக்கும் ரூ.3 ஆயிரம் வழங்கிட வேண்டும்.

அனைத்து விதமான வரிகளையும் காலதாமதமாகச் செலுத்தலாம். ஜூன் 30-ம் தேதி வரை வரிகளைச் செலுத்த அவகாசம் வழங்கலாம்.

பஞ்சாயத்துகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் ஆகியவற்றுக்கு அவர்கள் பெறும் வரி வருவாய் அடிப்படையில் வங்கிகள் கடன் வழங்கலாம். வங்கிகள் வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்துள்ள கடனுக்கான மாதத் தவணையைச் செலுத்த ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கலாம்.

தற்போதுள்ள சூழலில் இந்தத் திட்டங்கள், ஆலோசனைகள் அனைத்தும் அவசியம் தேவையாகும்.   எப்போதுமே. மக்கள் கைகளில், குறிப்பாக ஏழை மக்கள் கைகளில் அதிகமான பணம் புழங்கும்போது பொருளாதாரம் மேல் எழும்பும்.  பணிக்குச் செல்லாமல் வீடுகளில் இருக்கம் மக்களின் கைகளில் பணத்தைச் சேர்ப்பதுதான் உடனடி தேவையாகும். அடுத்தடுத்த நாட்களில் அடுத்துவரும் தேவைகளை அடையாளம் காண்போம். “ எனத் தெரிவித்துள்ளார்.