டில்லி

வ்வொரு கட்டுமான தொழிலாளிக்கும் டில்லி அரசு ரூ. 5000 வழங்க உள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகள் எண்ணிக்கை 500 ஐ தாண்டி உள்ளது.  இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நாடெங்கும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 144  ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார்.  அப்போது அவர், “டில்லியில் கடந்த 40 மணி நேரமாக ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.   தற்போதுள்ள நிலையில் கொரோனா 2 ஆம் கட்டத்தில் உள்ளது.

அது மூன்றாம் கட்டத்தை அடைவதைத் தடுக்க அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு அவர்கள் ஆலோசனைப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.  தற்போது அவர்கள் ஆலோசனைப்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பிகபட்டுள்ளது.   இதனால் பலர் துயருறுவதை அரசு அறிந்துள்ளது.

எனவே ஒவ்வொரு கட்டுமானத் தொழிலாளிக்கும் அரசு ரூ. 5000 நிவாரணத் தொகை வழங்க உள்ளது.  பலர் ஊரடங்கு உத்தரவால் உணவு கிடைக்காமல் திண்டாடுவதால் அவர்களை பொதுமக்கள் அருகில் உள்ள அரசு தங்குமிடத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.