சென்னை
கொரோனா பரவாமல் தடுக்க தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை அமலுக்கு வந்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று சுமார் 170க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்குப் பரவியுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பலி ஆனோர் எண்ணிக்கை 16 ஆயிரத்திற்கும் மேல் ஆகி உள்ளது. சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இந்திய மக்கள் எண்ணிக்கை 492 ஆக ஆகி உள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வரும் 31 ஆம் தேதி வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளன. பல மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில் தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில் முக்கிய நடவடிக்கையாக இன்று தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இந்த் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவு வருமாறு:
* மக்கள் அனைவரும் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும். அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். குறிப்பாக ஒருவரிடம் இருந்து 1 மீட்டர் அல்லது 3 மீட்டர் தூரம் வரை விலகி இருப்பதைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
* 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட தடை விதிக்கப்படுகிறது.
* வர்த்தக நிறுவனங்கள், டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும்.
* அரசு அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்பட வேண்டும்.
* போக்குவரத்தில் தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள், மாநில போக்குவரத்துக் கழகம், மெட்ரோ சேவைகள், டாக்சி, ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் மாநில போக்குவரத்துக் கழகத்தின் ஏ.சி. வசதி கொண்ட பஸ்கள் இயக்க அனுமதி இல்லை.
* மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பஸ் சேவைகள் நிறுத்தப்படுகின்றன.
* கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் மார்ச் 31ம் தேதி வரை அவரவர் வீடுகளிலேயே இருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதில் இருந்து தேர்வுகள் நடத்தும் மற்றும் விடைத்தாள் திருத்துபவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. தவிர தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பிரிவு அனைத்து அரசு, தனியார், சுயநிதி பல்கலைக்கழகங்கள், மருத்துவம்/பல் மருத்துவம் மற்றும் செவிலியர் கல்லூரிகளுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
* அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், டிஸ்பென்சரிகள், கிளினிக்குகள், மருந்துக்கடைகள், கண் கண்ணாடி கடைகள், ஆக்சிஜன் சிலிண்டர் யூனிட்கள், மருந்தகங்கள், மருத்துவ உபகரண தயாரிப்பு/சேவை யூனிட்கள், சுகாதாரம் சார்ந்த உபகரணம் தயாரிப்பு யூனிட்கள் மற்றும் அவை சார்ந்த போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு அனுமதி.
* உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, மளிகை பொருட்கள், பால், பிரட், பழங்கள், காய்கறிகள், இறைச்சி, முட்டை, மீன் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவை சார்ந்த போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதி.
* அனைத்து வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். சேவைகள், ஐ.டி., நிதி சேவை பேக் ஆபீஸ் மற்றும் ஐ.டி.இ.எஸ். நிறுவனங்களுக்கு அனுமதி.
* உணவு விடுதிகள், சிற்றுண்டிச் சாலைகள், சமையலகங்களில் இருந்து உணவு எடுத்துச் செல்ல மட்டுமே அனுமதி. பெட்ரோல் விற்பனை நிலையங்கள், சமையல் எரிவாயு நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள், அவற்றின் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுமதி.
* அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகளைத் தள்ளி வைத்துவிட்டு, கோவிட்-19 வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கத் தேவையான படுக்கை வசதிகளை ஏற்படுத்துதல்.
* சிறப்புப் பிரிவின் கீழ் விலக்கு பெற்றுள்ள கடைகள் கூட்ட நேரத்திலும், வாடிக்கையாளர் குறைவாக உள்ள நேரத்திலும் ஒருவருக்கொருவர் 3 அடி இடைவெளி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். நாளொன்றுக்கு மூன்று முறை அந்த இடத்தை சுத்தப்படுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நுழைவு வாயிலில் சானிடைசர் வைத்திருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.
* அங்கன்வாடிகள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு நல விடுதிகள், மால்கள், திரையரங்கங்கள், ஏசி வசதி கொண்ட கடைகள், கேளிக்கை பூங்காக்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், சுற்றுலா விடுதிகள், சுற்றுலாத் தலங்கள், கடற்கரைகள் உள்ளிட்டவை இந்த கால கட்டத்தில் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
* அனைத்து மத வழிபாட்டுத்தலங்கள் மூடப்படுகிறது. அதே நேரத்தில் தினசரி பூஜைகள் நடத்தப்படும்.
* கடந்த 16ம் தேதியோ அதற்கு முன்னதாக உறுதி செய்யப்பட்ட திருமணங்கள் மட்டும் நடத்த அனுமதிக்கப்படுகிறது. அதில் அதிகபட்சம் 30 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.
* திருமணங்கள் ரத்து செய்யப்பட்டால் அவற்றிற்குக் கொடுக்கப்பட்ட முன்பணம் தொகையை மண்டப நிர்வாகம் திருப்பி தரவேண்டும். .
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.