டெல்லி:

நாளை தூக்கிலிப்பட உள்ள நிலையில், நிர்பயா குற்றவாளி பவன் குப்தா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 12ந்தேதி நாட்டையே உலுக்கிய டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், முகேஷ்குமார் சிங், பவன்குப்தா,  வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகிய  நால்வருக்கும் டெல்லி  நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

இவர்கள் தண்டனைக்கு எதிராக ஏராளமான மனுக்களை சரமாரியாக தாக்கல் செய்து, தண்டனை நிறைவேற்றப்படுவதில் இருந்து தப்பித்து வந்தனர். இறுதியாக 4வது முறையாக நாளை (மார்ச் 20ந்தேதி) தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், குற்றவாளிகளில் ஒருவரான  பவன் குப்தா, குற்றம் நடைபெற்றபோது, தனதுக்கு வயது குறைவு என்றும், தனக்கு தூக்கு தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கும்படியும்,  உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு  தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீது உச்சநீதி மன்ற நீதிபதிகள், என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ரோகிங்டன் பாலி நாரிமன்,  ஆர்.பானுமதி, அசோக் பூஷண், ஏ.எஸ்.போபண்ணா  கொண்ட 6 நீபதிகள் அமர்வு விசாரணை நடத்தியது.

விசாரணையின்போது,  பவன் குப்தா ஏற்கனவே  கடந்த ஜனவரி 20ம் தேதி சீராய்வு மனு தாக்கல் செய்த போது, ‘டெல்லி உயர் நீதிமன்றமும், விசாரணை நீதிமன்றமும் அளித்த தீர்ப்பில் மீண்டும் தலையிட  முடியாது’ எனக் கூறி, ஜனவரி 31ம் தேதி மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இப்போதும் அதே காரணத்தை கூறி மறுசீராய்வு மனு தாக்கல்  செய்யப்பட்டதால், அதை  நீதிபதிகள் தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.