சென்னை

சென்னையில் ஒரு பெண் செயின்  திருடனை விரட்டி பிடித்துள்ளார்

வெள்ளிக்கிழமை இரவு 9 மணிவாக்கில் தனது மகன் ஜீவனை பார்க்குக்கு அழைத்து சென்றுவிட்டு டூவீலரில் வீடு திரும்பி கொண்டிருந்திருக்கிறார் நந்தினி.  அப்போது திடீரென இன்னொரு டூவீலரில் வந்த ஒருவன் இவரின் தாலி செயினை பறித்துக்கொண்டு நந்தினியைக் கீழே தள்ளிவிட்டுச் சென்றுவிட்டான்.

இதன்பிறகு நடந்ததை அவரே சொல்கிறார் கேட்போம்.  “கீழே விழுந்த நான் சுதாரிப்பதற்குள் பைக்கில பறந்துட்டான் அவன்.  அப்போ என் மகனைப் பார்த்தேன். அவன் கண்ணுல தெரிஞ்ச பயம் எனக்கு ஒரு கலக்கத்தை உண்டாக்கிருச்சு.  பையனுக்கு எதிர்ல நாம ஒரு கோழை மாதிரியான முன்னுதாரணமா இருந்திட கூடாதுனு முடிவு பண்ணி சட்டுனு எழுந்து என் வண்டிய ஸ்டார்ட் பண்ணி அவனை விரட்ட ஆரம்பிச்சேன்… போற வழி நெடுகிலும் அவனை பிடிங்க… அவனை பிடிங்கன்னு சத்தம் போட்டு எல்லாரையும் உதவிக்கி கூப்பிட்டுக்கிட்டே போனேன்.

அவன் நேரமா…. இல்ல என் நல்ல நேரமோ…  மார்கெட் ஏரியாக்குள்ள புகுந்து வேகமாக ஓட்டி தப்பிக்க நெனைச்ச அந்த திருடன் ஒரு பெரியவர் மேல இடிச்சி கீழே சாஞ்சிட்டான்.  விடுவேனா நான்… நேரா போய் அவன் சட்டை காலரோட சேர்த்து ஒரே அமுக்கா அமுக்கி தூக்கிட்டேன்.  நான் கத்தின கத்துல சுத்தியிருக்கிறவங்க எல்லாம் வந்து பிடிச்சுட்டாங்க அவனை.  ஆனா அவனோ நான் எந்த தப்பும் செய்யல… இவங்க ஆள் மாறி என்னை வந்து பிடிச்சிட்டாங்கன்னு சத்தியமே பண்றான்… அவனை செக் பண்ணி பார்த்தா அவன்கிட்ட என் செயின் இல்ல.  ஆனா இவன்தான்னு எனக்கு நிச்சயமா தெரியும்ங்கிறதால நான் அவனை விடவே இல்ல.  அதுக்குள்ள போலீஸ்க்கு தகவல் குடுத்திட்டதால உடனடியாக போலீஸ் டீம் ஸ்பாட்டுக்கு வந்துட்டாங்க…”

உடனே அங்க வந்திட்ட செம்பியம் சப் -இன்ஸ்பெக்டர் தலைமையிலான டீம் அவனை விசாரிப்பதற்காக காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.  செம்பியம் சப்-இன்ஸ்பெக்டர் திரு. விஜயகுமார், “ஸ்டேசன்ல வந்தும் அவன் பிடிவாதமா தான் எதுமே தப்பு செய்யலன்னும், அந்தம்மா யாரைனு தெரியாம தப்பா தன்னை வந்து பிடிச்சுட்டாங்கன்னும் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்றான்.  எங்களுக்கு ஒரே குழப்பம்.  சட்டுனு நாங்க குற்றம் நடந்த பழனியாண்டவர் கோவில் ஏரியாவில இருக்கிற CCTV பதிவுகள் எல்லாத்தையும் செக் பண்ணினோம்.  அப்போ இவன் தான் குற்றவாளினு உறுதியாச்சு.  மேற்கொண்டு தீவிரமா விசாரிச்சப்போ உண்மையை ஒத்துக்கிட்டான் அலாவுதீன்ங்கிற அந்த குற்றவாளி…” என்று அவன் பிடிபட்ட விபரங்களை விவரிக்கிறார்.

பிடிபட்ட அலாவுதீன்  அரும்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவன்.   வட சென்னை பகுதிகளில் இது போன்ற சங்கிலி பறிப்பு சம்பவங்களில் கடந்த  இரண்டரை மாதங்களுக்கு மேலாக ஈடுபட்டு வந்துள்ளான் இவன்.  இதற்காக திருவி்க நகரிலிருக்கும் தனது நண்பனிடம் டூவீலரை இரவல் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளான்.

கல்லூரி மாணவர்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவது சமீபமாய் அதிகரித்து வந்த வண்ணமாய் உள்ளது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விசயம்.

நந்தினியின் இந்த வீர சாகசத்தை பாராட்டிய காவல் துறையினர் இது எப்படி சாத்தியமானது என்று கேட்ட பொழுது, “விசயத்தை கேள்விப்பட்டு ஓடிவந்த பார்த்த என் வீட்டுக்காரரும்  கேட்ட முதல் கேள்வி… ‘எப்டி இப்டி வெரட்டிட்டு போய் பிடிச்சே’ ங்கிறது தான்” என்று கூறி சிரிக்கிறார்.

விளைவுகள் எதை பற்றியும் கவலைப்படாமல் துணிச்சலுடன் செயல்பட்டு விடாமல் விரட்டி சென்று திருடனை பிடித்த எம்பிஏ பட்டதாரி நந்தினி நிச்சயம் பாராட்டுக்குரியவர் தான்.

— லட்சுமி பிரியா