
சென்னை: வரும் கல்வியாண்டில் தமிழகத்தில் 25 புதிய தொடக்கப் பள்ளிகள், அரசின் சார்பில் ரூ.5.72 கோடி செலவில் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
சட்டசபையில் 110ம் விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர்.
அவர் கூறியதாவது: வரும் கல்வியாண்டில், ரூ.5.72 கோடி செலவில் 25 புதிய அரசு தொடக்கப் பள்ளிகள் துவங்கப்படும். பல அரசு தொடக்கப் பள்ளிகள் ரூ.3.90 கோடி செலவில் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
இப்பள்ளிகளுக்குத் தேவைப்படும் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்கள், பணி நிரவல் வாயிலாக நிரப்பப்படும். 15 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயரும். இவற்றுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் ரூ.26.25 கோடி செலவில் செய்து தரப்படும்.
தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ரூ.9.87 கோடி செலவில் ஏற்படுத்தப்படும். 30 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.55.50 கோடி செலவிலும், தேவையான கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ரூ.21.36 கோடி செலவிலும் ஏற்படுத்தப்படும் என்றார்.
மேலும், தமிழகத்தில் முதற்ட்டமாக 1,890 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
[youtube-feed feed=1]