டில்லி

சீனாவின் வுகான்  நகரில் இருந்து இந்தியா வந்த யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.

சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கடந்த  டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  அந்த நகரில் பரவிய கொரோனா அதன் பிறகு சீனா முழுவதும் பரவியது.  தற்போது இந்தியா உள்ளிட்ட 110 நாடுகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

வுகான் நகரில் இருந்த இந்தியர்கள் சென்ற மாதம் விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.  அவர்களில் 112 பேர் டில்லியில் உள்ள ஒரு முகாமில் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.  அதில் 36 பேர் வெளிநாட்டவர் ஆவார்கள்.  அவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாததால் இன்று காலை 11 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதைப் போல் வுகான் நகரில் இருந்து அழைத்து வரப்பட்ட மற்றொரு 124 பேர் ராணுவத்தினர் அமைத்த முகாம்களில் தனிமையில் தங்கி இருந்தனர்.  அவர்கள் வந்து   தற்போது 14 நாட்கள் முடிவடைந்துள்ளது.  அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இல்லாததால் அவர்களும் டிஸ் சார்ஜ் செய்யப்பட உள்ளனர்.