சென்னை:
துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசிய கருத்து தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவர்மீது வழக்குபதிவு செய்ய தேவையில்லை என்றும் உத்தரவிட்டு உள்ளது.
சென்னையில் நடந்த, ‘துக்ளக்’ இதழின், 50வது ஆண்டு பொன் விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ல், தி.க., தலைவராக இருந்த, ஈ.வெ.ராமசாமி சேலத்தில் நடத்திய பேரணி குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். இது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, ரஜினி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திராவிடர் விடுதலை கழக நிர்வாகி, உமாபதி என்பவர், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தார். ஆனால், காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், ரஜினி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, ரஜினி தரப்பில் ஆஜரான, உயர் நீதிமன்ற வழக்கறிஞர், ஆறுமுகம், ”ஈ.வெ.ரா., குறித்து, ரஜினி பேசியதற்கு ஆதாரங்கள் உள்ளன. அவர்மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இல்லை,” என, வாதாடினார். இதற்கு, திமுக உமாபதி தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாஜிஸ்திரேட், ரஜினிமீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதா என்பது குறித்து இன்று தீர்ப்பு வழங்குவதாக கூறினார். அதன்படி, மாலை தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பில், ரஜினி மீது வழக்கு பதிவதற்கான முகாந்திரம் இல்லை என்று கூறி திராவிடர் விடுதலை கழக சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தொடர்ந்த மனுவை தள்ளுபடி கூறி உள்ளது. மேலும், ரஜினி மீது வழக்கு பதிவு செய்யத் தேவையில்லை என்றும் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.