சென்னை: 18 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மாதாவரம் தீ முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
சென்னையை அடுத்த மாதவரம் பேருந்து நிலையம் அருகே ரசாயன கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கிடங்கில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
வழக்கத்துக்கு மாறாக அருகில் இருந்த கிடங்குகளுக்கும் தீ வேகமாக பரவ தொடங்கியது. இதையடுத்து, பீதியடைந்த மக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
25 தீயணைப்பு வாகனங்கள், 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 20 தனியார் தண்ணீர் லாரிகள் ஆகியவை அழைத்து வரப்பட்டு தீயணைப்புப் பணிகள் தொடர்ந்தன.
நள்ளிரவுக்குள் நெருப்பு பரவுவது தடுக்கப்பட்டு, தீ முற்றிலுமாக அணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரவு முழுக்க தொடர்ந்த தீயணைப்புப் பணிகள் இன்று காலை வரை தொடர்ந்தது.
கிட்டத்தட்ட 18 மணி நேரம் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு இந்த தீ முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திர பாபு தலைமையிலான குழு உட்பட காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்து தீயணைப்பு பணிகளை மேற்கொண்டனர்.