புதுடெல்லி: ஒன்பது மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று மீண்டும் அரியணையைப் பிடித்த பாஜகவுக்கு டெல்லி மக்கள் வழங்கிய தீர்ப்பு அது சமீப காலமாக சந்தித்து வரும் தோல்விகளில் மற்றுமொரு எண்ணிக்கையைக் கூட்டியுள்ளது. டெல்லி மட்டுமின்றி, மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய இடங்களில் பாஜக தலைமையிலான கூட்டணிகளின் முடிவுகள் அக்கட்சியின் கடினமான கருத்தியல் நிகழ்ச்சி நிரலுக்கான எதிரொலியாகக் கருதப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலத் தேர்தலின் போது ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை ரத்து செய்தது, ஹரியானா சட்டமன்றத் தேர்தலின் போது ராமர் கோயில் தீர்ப்பு மற்றும் டெல்லி தேர்தலின் போது குடியுரிமை திருத்தச் சட்டம் என பாஜக தனது ஒவ்வொரு தவறான அணுகுமுறைக்கான எதிர்விளைவினைச் சந்தித்திருக்கிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் 70 க்கு 65 தொகுதிகளைப் பெற்றிருந்த பாஜக, தேசிய தலைநகரில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளை முறைப்படுவதான மத்திய அரசின் முடிவை தேர்தல் பிரச்சாரத்தில்  முன்னிறுத்தாமல், சிஏஏவுக்கு எதிராகப் போராட்டங்களில் கவனம் செலுத்தியதன் விளைவோ என எண்ணத் தோன்றுகிறது.

கிட்டத்தட்ட இரண்டு மாத காலங்கள் கடுமையான சீதோஷ்ண சூழலில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் கூட திரண்டு சிஏஏவுக்கு எதிராக தமது கருத்தைப் பதிவு செய்து வருகின்றனர் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். அத்துடன் நாட்டின் பல இடங்களில், பல்வேறு சந்தர்ப்பங்களில், பாஜகவைப் பிரதிநிதிப்பவர்களால் வெளிப்படுத்தப்பட்ட வெறுப்பு மற்றும் பிரிவினைக் கருத்துக்களையும் மக்கள் ஏற்கவில்லை என்பதையே தொடரும் தோல்விகள் காட்டுகின்றன.

டெல்லி தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியூட்டுவதாக மூத்த பாஜக தலைவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். “மத்திய அரசு எடுத்த சில சட்டரீதியான முயற்சிகளுக்கு ஒப்புதலாக ஒரு வெற்றி தேவைப்பட்டது. ஆனால், சட்டத் திருத்தம் மற்றும் பொருளாதார வீழ்ச்சி மட்டுமல்லாது மற்ற பிரச்சினைககள் குறித்த விமர்சனங்களை எதிர்கொள்ள சிறந்த செயல்பாடும் அவசியம்“, என்றார் ஒரு மூத்த பாஜக தலைவர்.