சென்னை:

லைக்க வைக்கும் டிஎன்பிஎஸ்சி ஊழலில், முக்கிய புள்ளிகள் தப்பவிடப்படுகிறார்களோ? என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்துள்ள அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.

அதுபோல தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ள தகவல் வெளியாகி தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இதுதொடர்பாக டிடிவி தினகரன் விடுத்துள்ள அறிக்கையில்,  டி.என்.பி.எஸ்.சி. ஊழல் பற்றி நாள்தோறும் வெளியாகி வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. அரசுப்பணி என்பதை வாழ்நாள் கனவாகக்கொண்டு இரவு-பகலாக படித்து நம்பிக்கையோடு தேர்வு எழுதும் லட்சக்கணக்கான ஏழை, எளிய இளைஞர்களிடையே இ்த்தேர்வு முறைகேடு மிகப்பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் அடுத்தடுத்து சிலர் கைது செய்யப்பட்டாலும் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியிருக்கும் இவ்விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட முக்கிய புள்ளிகள் தப்பவிடப்படுகிறார்களோ? என்ற சந்தேகம் மக்களுக்கு வலுத்திருக்கிறது என்று தெரிவித்த உள்ளார்.

அதுபோல, 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்திருப்பது வெளியிட்டுள்ள டிவிட்டில், தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 9 மற்றும் 10 வகுப்புகளில் மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் இடைநிற்றல் 100% அதிகரித்திருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

இந்த வகுப்புகளில் 2015-16 கல்வியாண்டில் 8%ஆக இருந்த இடைநிற்றல் 2017-18 கல்வியாண்டில் 16.2%ஆக உயர்ந்திருக்கிறது.அதிலும்,அதிக அளவிலான இடைநிற்றல்கள் 2018 ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்கின்றன. இது,பள்ளிக்கல்வி தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு குழப்பத்தில் இருக்கிறது என்பதைகாட்டும் குறியீடாகும்.

இதனை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு, இடைநிற்றலுக்கான காரணங்களை முழுமையாக ஆராய்ந்து சரி செய்ய வேண்டிய கடமை பழனிசாமி அரசுக்கு இருக்கிறது. அதற்கான பணிகளில் அவர்கள் உடனடியாக ஈடுபட வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.