சென்னை:
லைகா தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பொங்கலுக்கு வெளியான தர்பார் படம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில், பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ரஜினியின் தர்பார் படத்தால் ரூ.25 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டும் விநியோகஸ்தர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்று அவர்கள் படத்தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் ரஜினிகாந்தை வலியுறுத்தி வருகின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்த உத்தரவாதத்தின்படியே படத்தை அதிக விலைக்கு வாங்கியதாக விநியோகஸ்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்த நிலையில், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விநியோகஸ்தர்களால் தனக்கும், தனது படப்பிடிப்புக்கும் இடைஞ்சல் ஏற்படலாம் என கருதுவதால், பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறி உள்ளார்.