கோபால்பூர்
அசாம் மாநிலத்தில் வெளிநாட்டவர் எனக் கூறி தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களில் 29 பேர் மரணம் அடைந்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதில் சுமார் 19 லட்சம் நபர்களின் பெயர் விடுபட்டிருந்தது. ஆகவே அவர்கள் வெளிநாட்டவர் என அறிவிக்கப்பட்டனர். இருப்பினும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் சரியான ஆவணங்களைக் கொண்டு நிரூபிக்கலாம் என அவகாசம் வழங்கப்பட்டது.
கவுகாத்தி உயர்நீதிமன்ற உத்தரவின்படி அசாம் மாநிலத்தில் தடுப்பு முகாம்கள் கட்டப்பட்டன. இந்த முகாம்களில் தங்குபவர்களில் சிலர் உயிரிழந்து வருகின்றனர். இவ்வாறு தங்க வைக்கப்பட்டவர்களில் ஒருவர் திடீரென உயிர் இழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் மரணம் அடைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்த முகாம்களில் இறந்தவர்களில் இவர் 29 ஆம் நபர் ஆவார்.
முகாமில் இறந்தவரின் பெயர் நரேஷ் கோச் என்பதாகும். இவர் அசாம் மாநிலத்தில் டின்கோனியா என்னும் பகுதியில் கடந்த 1964 முதல் வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. கோச் என்பது மேகாலயா பகுதியைச் சேர்ந்த ஆதிவாசிகள் இனத்தவரின் பெயர் ஆகும். இவருக்குச் சொந்தமாக நிலம் இருந்துள்ளது. ஆயினும் இவர் பெயர் குடிமக்கள் பட்டியலில் இல்லாததால் இவர் தடுப்பு முகாமுக்கு அனுப்பப் பட்டுள்ளார்.