புதுடெல்லி: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பயணிப்பதற்காக வாங்கப்படவுள்ள 2 போயிங் அகல-ரக விமானங்கள் ரூ.8,458 கோடி விலை மதிப்புள்ளவை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2006ம் ஆண்டு, அமெரிக்க விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 68 விமானங்களுக்கான ஆர்டரின் ஒரு பகுதிதான் மேற்கண்ட 2 விமானங்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்திய பட்ஜெட்டில்கூட, இந்த விமானங்களுக்காக ரூ.810.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில், இவற்றுக்காக அரசால் ஒதுக்கப்பட்டத் தொகை ரூ.4,741 கோடிகள்.

இந்த விமானங்கள் பயன்பாட்டிற்கு வந்தவுடன், தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் போயிங் – 747 ரக விமானங்கள் அச்சேவையிலிருந்து விலக்கப்படும்.

மேலும், இந்த விமானங்கள் ‘ஏர் இந்தியா ஒன் சைன்’ என்ற அடையாளத்திலேயே பறக்கும். இந்த அடையாளம் தாங்கிய விமானங்கள், குடிரசுத் தலைவர் மற்றும் பிரதமர் பயணிப்பதற்கானவையாகும்.