பெங்களூரு
சவுதியில் ஒரு மாதம் முன்பு கைது செய்யப்பட்ட கர்நாடக வாலிபர் ஹரீஷ் பங்கேரா குறித்து அந்நாட்டு அரசு தகவல் ஏதும் அளிக்காமல் உள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் குண்டாபூர் வட்டத்தில் பிஜாடி என்னும் சிற்றூர் உள்ளது. அந்த் சிற்றூரைச் சேர்ந்த ஹரீஷ் பங்கேரா என்னும் 32 வயது வாலிபர் சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்திய தலைநகரான தமாம் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஏ சி மெக்கானிக் ஆகப் பணி புரிந்து வருகிறார்.
இவர் முகநூலில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் குறிப்பிட்ட இனத்தைப் பற்றி ஆட்சேப கரமான செய்தியைப் பகிர்ந்துள்ளார். இதற்காகக் கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி ஹரீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் சவுதி அரசுக்கு அனுப்பிய கடிதங்களுக்கு இதுவரை பதில் வராமல் உள்ளது.
ஹரீஷ் மனைவி சுமனா உடுப்பியில் வசித்து வருகிறார். இவர் தனது கணவர் பெயரில் யாரோ போலி முகநூல் கணக்கு துவங்கிப் பதிவிட்டது இந்த பிரச்சினைகளுக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளார். உடுப்பி காவல்துறையினர் ஹரீஷ் பணி புரியும் அமெரிக்க நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கும் ஏதும் பதில் கிடைக்கவில்லை.
ஹரிஷின் ஊரைச் சேர்ந்த தமாம் நகரில் வசிப்பவர்கள் அவரை சிறையில் சென்று சந்திக்க முயன்றுள்ளனர். ஆனால் அவரை சந்திக்க காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. ஹரீஷுடன் வசித்து வரும் பாகிஸ்தான் இளைஞர் அவரை சிறையில் சென்று சந்திக்க முயன்றுள்ளார். அவராலும் ஹரீஷை சந்திக்க முடியவில்லை.
உடுப்பியில் தனது இரண்டரை வயது மகளுடன் வசித்து வரும் ஹரீஷ் மனைவி சுமனா, “ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை ஹரீஷ் எங்களுடன் தொலைப்பேசியில் பேசுவார். எனது மகளுடன் அடிக்கடி வீடியோ அழைப்பில் பேசுவார். கடந்த சில நாட்களாகத் தந்தையைக் காணாமல் என மகள் ஏங்குகிறாள். அவ்ளுக்கு எப்படி புரிய வைப்பது எனத் தெரியவில்லை” எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.