டில்லி
நிதிநிலை அறிக்கையில் எல் ஐ சி மற்றும் ஐடிபிஐ வங்கி அரசுப் பங்குகள் விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்த்தற்கு ஆர் எஸ் எஸ் தொழிலாளர் அமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2020-21 ஆம் அண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் எல் ஐ சி மற்றும் ஐடிபிபி வங்கிகளில் அரசுக்குச் சொந்தமான பங்குகளில் ஒரு பகுதியை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ஆனால் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ் அமைப்பின் தொழிலாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது பலருக்கும் வியப்பை ஆழ்த்தி உள்ளது. ஆர் எஸ் எஸ் அமைப்பின் தொழிலாளர் பிரிவான பாரதிய மஸ்தூர் சங்கம் நேற்று இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “எல் ஐ சி நடுத்தர வகுப்பு மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஐடிபிஐ வங்கி சிறு தொழில்களுக்கு ஆதரவு அளிப்பதால் பல தனியார் தொழிலதிபர்கள் லாபம் அடைய பெரும் உதவி செய்து வருகிறது. இந்த தொழிலதிபர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகின்றனர்.
ஆனால் அரசு இந்த நிறுவனங்களில் உள்ள தனது பங்குகளில் ஒரு பகுதியை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. அரசு லாபம் ஈட்டாத நிறுவனப் பங்குகளை மட்டும் விற்பனை செய்து வந்த நிலையில் இந்த நடவடிக்கை நாட்டின் முக்கிய சொத்துக்களை விற்பதற்கு ஒப்பாகும். இது மோசமான பொருளாதாரத்தின் அறிகுறி ஆகும்.
தேசிய அளவில் ஒரு விவாதம் நடத்தி அரசின் வருவாயை அதிகரிப்பதற்கான வழிமுறையைக் கண்டறிய வேண்டும். ஆனால் அரசு தனது வருவாய்க்காக பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பது அரசின் தவறான போக்காகும்.” என அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.