சென்னை:
திருச்சி தனியார் கல்லூரி வளாகத்தில் நாளை திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க மறுத்த உயர்நீதி மன்றம், இதுகுறித்து, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தனியார் கல்வி நிறுவன வளாகத்தில் அரசியல் தொடர்பான கூட்டம் நடத்த ஒதுக்க தடைகோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தடை விதிக்க மறுத்ததுடன், அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் மாநாடு திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் நாளை (31-ந் தேதி) நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்.
இந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 6674 உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 500-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைகின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் தி.மு.க. முழுமையான வெற்றியை பெற்றுள்ளது. இதனால் திருச்சியை மையப்படுத்தி இந்த மாநாடு திருச்சியில் நடத்தப்படுகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் மாநாடு மதியம் 2 மணிக்கு நிறைவடைகிறது.
இந்த மாநாட்டில் பொருளாளர் துரைமுருகன், உள்ளாட்சி பெண் தலைவர்களின் கணவர்கள், 65 மாவட்ட தி.மு.க. செயலாளர்கள், 100-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், மற்றும் எம்.பி.க்கள் உள்பட பலர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.