திருவனந்தபுரம்:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸ் இந்தியாவுக்கு பரவியது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மாணவர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய கோரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கியவர்கள் ஒருவித நிமோனியா காயச்சலுக்கு உள்ளாகி மரணத்தை தழுவி வருகின்றனர்.
சீனாவில், இதுவரை 170 பேர் பலியாகி உள்ளதாகவும், சீனா முழுவதும் 5,974 பேர் இந்த கொடிய வைரசின் பிடியில் சிக்கியிருப்பதாக சீனா அரசு அதிரகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
உயிரை பறித்துவரும் இந்த கொடூர வைரஸ் பரவுவதை தடுக்க இந்தியா உள்பட உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, விமான பயணிகளுக்கு மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு நடத்திய சோதனையில், அவருக்கு கோரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவரை மருத்துவ மனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை மத்திய, மாநில அரசுகளும் உறுதி செய்துள்ளன.
இந்தியாவில் கோரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ள முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.