திருவனந்தபுரம்

கேரள ஆளுநரை திரும்பப் பெறக் கோரி காங்கிரஸ் இயற்றிய தீர்மானத்துக்குக்  கேரள சபாநாயகர் ஒப்புதல் அளித்துள்ளார்.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்குப் பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.   அவ்வகையில் கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் இந்த சட்டத்துக்கு எதிரான தீர்மானங்களை அந்த மாநில சட்டப்பேரவையில் இயற்றி உள்ளன.   இந்த தீர்மானத்துக்குக் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

ஆளுநர் ஆரிஃப், “மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் இயற்றக் கூடாது.  அந்த சட்டத்தை மாநில அரசுகள் எதிர்ப்பு இன்றி நிறைவேற்ற வேண்டும்” எனக் கூறி இருந்தார்.  ஆளுநரின் இந்த பேச்சு மாநிலம் முழுவதும் கடும் சர்ச்சையை உண்டாக்கியது.  குறிப்பாக ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

கேரள சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதாலா இதையொட்டி கேரள ஆளுநர் ஆர்ஃப் முகமது கானை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக் கோரிக்கை தீர்மானம் கொண்டு வந்தார்.  இந்த தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய கேரள சபாநாயகர் பி ஸ்ரீராமகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார்.