மும்பை: இந்தாண்டிற்கான கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலில், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. அதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வீரர்களை, 4 பிரிவுகளாக பிரித்து பிசிசிஐ அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும். ஏ ப்ளஸ்  பிரிவு வீரர்களுக்கு 7 கோடி ரூபாய், ஏ பிரிவு வீரர்களுக்கு 5 கோடி ரூபாயும் வழங்கப்படும்.

பி பிரிவு வீரர்களுக்கு 3 கோடி ரூபாய், சி பிரிவு வீரர்களுக்கு 1 கோடி ரூபாயும் சம்பளமாக கொடுக்கப்படும். அதன்படி, இந்தாண்டுக்கான வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டு இருக்கிறது.

2019-20ம் ஆண்டுக்கு பட்டியலில் முன்னாள் கேப்டன் தோனியின் பெயர் எந்த பிரிவிலும் இடம்பெறவில்லை. ஏ பிளஸ் கேட்டகிரியில் கேப்டன் கோலி, ரோகித், பும்ரா ஆகியோர் உள்ளனர்.

அவர்களுக்கு 7 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படும். 5 கோடி ரூபாய் ஊதியம் பெறும் ஏ பிரிவில் கே.எல் ராகுல், ஷிகர் தவான், அஸ்வின், ஜடேஜா என 16 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஹர்திக் பாண்ட்யா, சாஹல் உள்ளிட்ட 5 வீரர்கள் 3 கோடி ரூபாய் ஊதியம் பெறும் பி பிரிவிலும், கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே, நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர்,ஸ்ரேயாஸ் அய்யர்,தீபக் சாஹர்  உள்ளிட்டவர்கள் சி பிரிவில் ஒப்பந்தமாகியுள்ளனர்.

தோனியுடன் அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோரது பெயர்களும் பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இல்லை. உலக கோப்பை தொடருக்கு பிறகு தோனி இதுவரை எந்த தொடரிலும் விளையாட வில்லை.

இப்போது ஒப்பந்த பட்டியலிலும் இல்லை. எனவே எதிர்காலத்தில் இந்தியா அணிக்காக தோனி களம் இறங்குவாரா, இல்லையா என்பதில் பெரிய சந்தேகம் எழுந்துள்ளது.