திருவையாறு

திருவையாற்றில் இன்று காலை நடைபெற்ற தியாகராஜ ஆரானை விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் கலந்துக் கொண்டு பஞ்சரத்ன கீர்த்தனை பாடினார்கள்

கடந்த 11 ஆம் தேதி அன்று திருவையாறு தியாகராஜர் ஆசிரமத்தில் 173 ஆம் ஆராதனை தொடங்கியது.    ஐந்து நாட்களாக நடைபெறும் இந்த விழாவில் தியாகராஜர் முக்தி அடைந்த தினமான இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்சரத்ன கீரத்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.    அதற்கு முன்னதாக காலை 5.30 மணிக்குத் தியாகராஜர் வசித்த இல்லத்திலிருந்து பஜனை ஊர்வலம் நடந்தது.

இந்த ஊர்வலம் ஆசிரமத்தை அடைந்ததும் தியாகராஜருக்கு அபிஷேகம் நடந்தது.  அதன் பிறகு காலை 9 மணிக்கு பஞ்சரத்ன கீர்த்தனை இசைத்து கலைஞர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.   இந்த நிகழ்ச்சி பிரபஞ்சம் எஸ்.பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் தொடங்கியது.  தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ‘ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக…’ என்ற பாடல் பாடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, ஆதி தாளத்தில் அமைந்த ‘துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ…’ என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த ‘கனகன ருசி ராக நகவஸந நிந்நு…’ என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த ‘எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு…’ ஆகிய பாடல்களைப் பாடி இசைக்கலைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ். அருண், பாபநாசம் அசோக் ரமணி, அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ், திருவனந்தபுரம் பின்னி கிருஷ்ணகுமார் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீ தியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர்.