புதுடெல்லி: விரைவில் நடைபெறவுள்ள டெல்லி மாநில சட்டசபைத் தேர்தலில், தற்போதைய ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி தனித்தேப் போட்டியிடும் என்றும், யாருடனும் கூட்டணி இல்லை என்றும் தெரிவித்துள்ளார் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி மாநில சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களை வென்று பிரமிக்க வைத்தது. பாரதீய ஜனதா 3 இடங்களைப் பெற்றது. காங்கிரசுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
தற்போது நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அடுத்த மாதம் பிப்ரவரி 8ம் தேதி தேர்தலும், பிப்ரவரி 11ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், “தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்தேப் போட்டியிடும். கூட்டணி தொடர்பாக எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. தனித்து நின்றே போட்டியிட்டு வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.