சென்னை: 2019ம் ஆண்டில் தான் தமிழகத்தில் அதிக பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக அதிகாரி சஞ்சய் காந்தி கூறியுள்ளார்.
ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடு தான் புவிசார் குறியீடு. தமிழகத்தில் பல பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
தஞ்சை ஓவியம், மதுரைச் சுங்கடி, நாகர்கோவில் நகை என்று பல பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. 2019ல் ஏழு பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் இதற்கும் குறைவான பொருள்களுக்குத்தான் புவிசார் குறியீடு பெற முடிந்தது.
தற்போது 7 பொருள்கள் கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறி உள்ளனர். இதுகுறித்து நோடல் அலுவலரும் புவிசார் குறியீடு பெற்றுத்தர முயற்சி எடுத்துவரும் அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞருமான சஞ்சய் காந்தி கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் 360 பொருள்களுக்கு மேல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பல பொருள்களும் அதில் அடங்கும். 2019ல் மட்டும் ஈரோடு மஞ்சள், திருபுவனம் பட்டு, கொடைக்கானல் மலைப்பூண்டு, பழனி பஞ்சாமிர்தம், திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உள்ளிட்ட 7 பொருள்களுக்கு கிடைத்துள்ளது.
2019ல் 7 பொருள்கள் என்பது தமிழகத்திற்கு அதிகமான பொருள்களாகும். அதில் காரைக்குடி கண்டாங்கி, திருபுவனம் பட்டு உள்ளிட்ட 4 பொருள்களுக்கு என்னுடைய முயற்சியில் புவிசார் குறியீடு பெற்றுக் கொடுத்துள்ளேன்.
2018ல் மாமல்லபுரத்தில் நினைவுச் சின்னங்களுக்கு புவிசார் குறியீடு பெற்று கொடுத்ததால் தமிழக அரசு 2019 கைவினைப் பொருள்கள் கலைஞர்கள் மாநாட்டில் என்னை கெளரவப்படுத்தியது. தொடர்ந்து தமிழகத்தில் அதிகமான பொருள்களுக்குப் புவிசார் குறியீடு பெற்றுக் கொடுத்துள்ளேன்.
தற்போது நோடல் அலுவலராக இருப்பதால் பல்வேறு பொருள்களுக்கும் எளிமையாக புவிசார் குறியீடு பெற்றுத் தரவும், புதுப்பித்துத் தரவும் முடிகிறது. நடப்பாண்டிலும் தமிழகத்தில் பல பொருள்களுக்குப் புவிசார் குறியீடு பெற்றுத்தருவோம்.
புவிசார் குறியீடு பெறுவதால் ஒரு சட்டப் பாதுகாப்பு கிடைக்கிறது. போலிகளை தவிர்க்கலாம். சிறு தொழில் பெரும் தொழிலாக மாறும், விளம்பரம் ஏற்படும், தொழிலாளர்கள் நலன் உயரும், ஆராய்ச்சி மாணவர்கள் கூட பொருள்கள் குறித்து ஆராய்ச்சி செய்யலாம் இப்படிப் பல்வேறு நலன்களைப் புவிசார் குறியீடு வழங்குகிறது என்றார்.