பாலசோர்
தேசிய குடியுரிமை பதிவேட்டை ஒரிசா மாநிலத்தில் அமல் படுத்த மாட்டோம் என முதல்வர் உறுதி அளித்துள்ளதாக அவரை சந்தித்த இஸ்லாமியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
நாடெங்கும் குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு அமலாக்கம் ஆகியவற்றை எதிர்த்து கடும் போராட்டம் நடந்து வருகிறது. ஏற்கனவே அசாம் மாநிலத்தில் தேசிய குடியுரிமை பதிவேடு அமல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இந்த நடவடிக்கை தொடரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதையொட்டி ஒரிசா மாநிலத்தில் உள்ள பாலசோர், பாத்ரக், ஜாஜ்பூர் மாவட்ட இஸ்லாமியப் பிரதிநிதிகள் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உடன் ஒரு சந்திப்பை நிகழ்த்தினர். அப்போது அவர்கள் குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடியுரிமைப் பதிவேடு குறித்து முதல்வரிடம் தங்கள் குறைகளைத் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அந்த சந்திப்பில் இஸ்லாமியப் பிரதிநிதிகள் தலைவர் முகமது அப்துல் பாரி, “குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என முதல்வர் நவீன் பட்நாயக் எங்களிடம் தெரிவித்தார். அத்துடன் தேசிய குடியுரிமை பதிவேடு மாநிலத்தில் அமல் செய்யப்பட மாட்டாது என அவர் உறுதி அளித்தார். இது குறித்து இஸ்லாமிய சமூகத்தில் அச்சம் உள்ளதை உணர்ந்த அவர் எங்களுக்கு இவ்வாறு உறுதி அளித்துள்ளார்.” எனத் தெரிவித்தார்.