சென்னை

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்தது குறித்து அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் எஸ் ஆர் பாலசுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது முக்கியமான ஒரு நிகழ்வாகக் கருதப்பட்டது.   இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியதற்கு அதிமுகவும் ஒரு முக்கிய காரணம் எனப் பலரும் தெரிவித்துள்ளனர்.  அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் எஸ் ஆர் பாலசுப்ரமணியன் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “பல மாநிலக் கட்சிகள் எதிர்த்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்தற்குக் காரணம் வற்புறுத்தல் ஆகும்.   பாஜகவின் அனைத்து கூட்டணி கட்சிகளும் குறிப்பாக மாநிலங்களை ஆளும் கட்சிகள் இந்த மசோதாவை ஆதரிக்க வேண்டும் என வற்புறுத்தப்பட்டது.

ஆனால் நான் இந்த மசோதாவில் உள்ள குற்றங்களைச் சுட்டிக் காட்டினேன்.  அதில் இஸ்லாமியர் என்னும் சொல் இடம் பெறவில்லை.  தவறு எப்போதுமே தவறுதான்.

பாஜக எதையும் நேரடியாகச் செய்யாது. நாங்கள் இது குறித்து கட்சி அலுவலகத்தில் விவாதித்த போது சட்டப்பேரவை துணை செயலர் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தொலைப்பேசி மூலம் தெரிவித்தார்.  நான் எனது கருத்துக்களைச் சொல்வேன் எனக் கூறினேன். அவரும் ஒப்புக்கொண்டார்.

பாஜகவின் முக்கிய நோக்கம் இந்து ராஜ்ஜியம் அமைப்பதாகும்.  ஆனால் அதை அக்கட்சி நேரடியாக சொல்லாமல் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   இந்த நடவடிக்கைகள் மூலம் அக்கட்சி இந்து மக்களை கவர எண்ணுகிறது.  குறிப்பாக அமித்ஷா போன்ற தலைவர்கள் சமயம் கிடைக்கும் போது எல்லாம் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

எங்களைப் பொறுத்த வரையில் நாங்கள் என்றும் இஸ்லாமியருக்கு எதிரானவர்கள் இல்லை.   இதை நான் மாநிலங்களவையில்  பேசும் போது தெளிவாக தெரிவித்துள்ளேன்.” எனக் கூறி உள்ளார்.