டெல்லி: ஜெய்ஷாவை தனிப்பட்ட மனிதராக பாருங்கள், அமித் ஷாவின் மகனாக பார்க்காதீர்கள் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான கங்குலி டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பல விஷயங்கள் குறித்து விரிவாக பேசினார்.
அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராக தேர்வு செய்யப்பட்டது, அவரது செயல்பாடுகள் உள்ளிட்ட பலவற்றை பற்றி உரையாற்றினார். நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:
நீங்கள் ஏதேனும் ஒரு துறையில் பெரிய ஆளுமையாக இருந்தால் உங்கள் மகனோ, மகளோ அதே துறையில் ஜொலிக்ககூடாதா? இந்தியாவில் தான் இப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள்.
மற்ற நாடுகளில் எல்லாம் இப்படி இல்லை. ஆஸ்திரேலியாவில் ஒரே அணியில் 100 போட்டிகளில் வாஹ் சகோதரர்கள் விளையாடி இருக்கின்றனர். கரன் சகோதர்கள் இங்கிலாந்து அணிக்காக விளையாடுகின்றனர்.
சச்சின் பலமுறை சொல்லியிருக்கிறார். எனது மகனை சச்சினின் மகனாக பார்க்காதீர்கள். கிரிக்கெட் வீரராக பாருங்கள் என்று. டிராவிட் மகன்கள் இருவரும் கர்நாடக கிரிக்கெட்டில் அருமையாக ஆடி வருகின்றனர்.
தனிநபராக அவர்களின் திறமைகளை பாருங்கள். இதே தான் நான் ஜெய்ஷாவுக்கு சொல்வேன். அவரை அமித் ஷாவின் மகன் என்று பார்க்க வேண்டாம். அவர் தேர்தலில் வென்றிருக்கிறார்.
குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் 6 முதல் 7 ஆண்டுகள் வரை சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். அவரது தந்தை அரசியல்வாதியாக இருக்கலாம், ஆனால் அவர் இல்லையே? அவரை தனித்துவமாக, அவரது திறமையை வைத்து தான் அளவிட வேண்டும் என்றார்.
[youtube-feed feed=1]