சபரிமலை
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கூட்டம் அதிகரித்து நேற்று முன் தினம் வரை சுமார் ரூ.69.39 கோடி வருமானம் வந்துள்ளது.
கடந்த மாதம் 17 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காகத் திறக்கப்பட்டுள்ளது. அன்று முதல் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. சென்ற ஆண்டு அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையொட்டி கடும் வன்முறை வெடித்தது. இதனால் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் குறைந்தது.
சமீபத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றித் தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஆயினும் கேரள அரசும் காவல்துறையும் பெண்கள் விளம்பரம் தேடும் நோக்கில் வருவதால் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என அறிவித்தது. இதனால் இந்த வருடம் பக்தர்கள் வருகை பன்மடங்கு அதிகரித்துள்ளது
திருவாங்கூர் தேவசம் போர்டை சேர்ந்த விஜயகுமார், “சென்ற ஆண்டு மண்டல பூஜையின் போது கோவிலின் மொத்த வருமானம் ரு.41.84 கோடியாக இருந்தது. தற்போது 20 நாட்களில் ரூ. 69.39 கோடி வருமானம் வந்துள்ளது. இவை அரவணப் பாயச விற்பனை, அப்பம் விற்பனை மற்றும் உண்டியல் காணிக்கை மூலம் கிடைத்த வருமானம் ஆகும்.” எனத் தெரிவித்துள்ளார்.