மும்பை

வசரநிலை சட்ட நேரத்தில் சிறையில் அடைக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் அரசு உதவித் தொகையை சிவசேனா கூட்டணி அரசு ரத்து செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 1970களில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலைச் சட்டத்தை அறிவித்தார்.   அப்போது ஏராளமான எதிர்க்கட்சியினர் சிறை தண்டனை அனுபவித்தனர்.  தற்போது பாஜக ஆட்சிக்கு வந்த மாநிலங்களில் அவ்வாறு சிறைத் தண்டனை அனுபவித்தவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.  அவ்வகையில் மகாராஷ்டிர மாநிலத்தில் முந்தைய பாஜக அரசு உதவித்தொகை திட்டத்தை அறிவித்தது.

தற்போது சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் அகிதி ஆட்சி அமைத்துள்ளது.  நேற்று முன் தினம் இந்த அரசின் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.  அப்போது அவசர நிலைச் சட்ட கைதிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை ரத்து செய்யுமாறு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் நிதின் ரவுத் முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் கோரிக்கை விடுத்தார்.

நிதின் ரவுத், “இந்த திட்டத்தின் மூலம் தேவையில்லாமல் அரசுப் பணம் செலவழிக்கப்படுகிறது.  ஒரு குறிப்பிட்ட அமைப்பினருக்கு உதவுவதற்காக முந்தைய அரசால் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.  எனவே இந்த திட்டத்தை ரத்து செய்யுமாறு முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.   இந்த உதவித்தொகை பெறுவோரில் பெரும்பாலானோர் ஆர் எஸ் எஸ் அமைப்பினர் என்பதால் அவர் இவ்வாறு கூறி உள்ளார்.

இது குறித்து பரிசீலிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.  ஏற்கனவே ஆர் எஸ் எஸ் அமைப்புக்கு ரூ.1.5 கோடிக்கு ஸ்டாம்ப் டூட்டி சலுகை அளித்த முந்தைய அரசின் உத்தரவை சிவசேனா கூட்டணி அரசு ரத்து செய்துள்ளது.  எனவே அதைப்போல் அவசர நிலை சட்ட கைதிகள் உதவித் தொகையும் ரத்து செய்யப்படலாம் என கூறப்படுகிறது.