மும்பை
மகாராஷ்டிர மாநில ஊழல் தடுப்பு காவல்துறை தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் மீதான நீர்ப்பாசன ஊழல் வழக்கில் குற்றமற்றவர் என உறுதி செய்துள்ளது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த விதர்பா நீர்ப்பாசன திட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் மீது கோடிக்கணக்கில் மோசடி நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட அஜித்பவார் வெற்றி பெற்றார்.
சிவசேனா மற்றும் பாஜகவிடையே நடந்த முதல்வர் பதவி பங்கீடு சர்ச்சை காரணமாகக் கூட்டணியில் இருந்து சிவசேனா விலகி தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றது. அப்போது ஆளுநர் திடீரென பாஜகவின் தேவேந்திர பட்நாவிசுக்கு முதல்வராகப் பதவி ஏற்பு நடத்தி வைத்தார். அவருடன் துணை முதல்வராக அஜித் பவார் பதவி ஏற்றார். இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் அஜித் பவார் மீதான வழக்கில் அவர் மீது சரியான ஆதாரம் இல்லாததால் வழக்கில் இருந்து அவரை விடுவிக்கலாம் என மகாராஷ்டிர மாநில ஊழல் தடுப்பு காவல்துறை மனு அளித்தது. உச்சநீதிமன்றம் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தேவேந்திர பட்நாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அஜித் பவார் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேசியவாத காங்கிரசுடன் இணைந்தார்.
சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க இயலாத நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே தேவேந்திர பட்நாவிஸ் பதவி விலகினார். அதன் பிறகு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சியைப் பிடித்தன. தற்போது அஜித் பவார் நீர்ப்பாசன ஊழல் வழக்கில் குற்றமற்றவர் என ஊழல் தடுப்பு காவல்துறை உறுதி செய்துள்ளது. இதனால் அந்த வழக்கில் இருந்து அஜித் ப்வார் முழுமையாக விலக்கப்பட உள்ளார்.