கொல்கத்தா:
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசித் தீர்க்க தயாராக இருப்பதாக மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கார் தெரிவித்து உள்ளார்.
நேற்று சட்டப்பேரவை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வருவதாக ஆளுநர் கூறிய நிலையில், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மேற்கு வங்க சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டு, தலைமைச்செயலக கேட் பூட்டப்பட்டது. இதனால் ஆளுநர் அலுவலகம் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டி, ஆளுநர் தங்கர் தனது மனைவி யுடன் சட்டமன்றம் சென்று, அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அவரை சட்டமன்றத்தின் மார்ஷல், பிற அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.
இன்று ஆளுநர் சபைக்கு வந்திருந்த நிலையில், சபாநாயகர் பிமான் பானர்ஜி ஒரு வணிக ஆலோசனை (பிஏ) குழு கூட்டத்தில் கலந்துகொண்டிருந்ததால் அவர் வர முடியவில்லை என்று கூறப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜகதீப் தங்கர், முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் அரசாங்கத்துக்கும் ராஜ் பவனுக்கும் இடையே நடந்து வரும் மோதலைத் தீர்ப்பதற்கு பேச்சு வார்த்தைக்கு அமரத் தயாராக இருப்பதாக கூறினார்.
ஒருவருக்கொருவர் கலந்து பேசினால்மட்டுமே, பிரச்சினைகள் தீர்க்கப்படு, மாநிலத்தின் வளர்ச்சி முன்னோக்கி செல்லும் என்று கூறியவர், இது தொடர்பாக தான் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், இந்த சந்திப்பு ராஜ்பவன் என்றாலும் சரி வேறு இடமானாலும் சரி விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன் என்றவர், இது தொடர்பாக முதல்வருக்கு நான் எழுதியுள்ளேன் என்றும் தெரிவித்தார்.
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. மம்தா பானர்ஜி, தேசிய குடிமக்கள் பதிவேடு உள்பட மோடி அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.