மும்பை
மகாராஷ்டிர கூட்டுறவு வங்கியுடன் பி எம்சி வங்கியை இணைக்க மாநில அரசு பரிந்துரை செய்துள்ளதாக அம்மாநில அமைச்சர் ஜெயந்த் பாடில் தெரிவித்துள்ளார்.
பி எம் சி வங்கி என சுருக்கமாக அழைக்கப்படும் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் மோசடி நடந்ததாகப் புகார் எழுந்தது. வங்கி மீது எழுந்த ரூ.4,355 கோடி முறைகேடு புகாரின் அடிப்படையில் வங்கியின் நடவடிக்கைகள் ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்டது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு பணம் எடுக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அத்துடன் வங்கி திவாலாகலாம் எனத் தகவல்கள் எழுந்தன. இந்த தகவலை அடுத்து வாடிக்கையாளர்கள் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இந்த அதிர்ச்சியில் 8 பேர் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. பல வாடிக்கையாளர்கள் முதலீட்டைத் திரும்பப் பெற வேண்டி தினமும் வங்கிக்கு சென்று வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஜெயந்த் பாடில் அமைச்சராக அதிவ் ஏற்றுக கொண்டுள்ளார். நேற்று அவர் செய்தியாளர்களிடம் பி எம் சி வங்கியை மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கியுடன் இணைப்பது பற்றிக் கூறி உள்ளார்.
ஜெயந்த் பாடில், “நேற்று முன்தினம் நான் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி தலைவரிடம் பேசினேன். நாங்கள் பி.எம்.சி. வங்கியை மகாராஷ்டிரா வங்கியுடன் இணைக்க முயற்சி செய்யுமாறு பரிந்துரை செய்து உள்ளோம். இது தொடர்பாக ரிசர்வ் வங்கியிடம் பரிந்துரை செய்யவும் தயாராக உள்ளோம்.
இணைப்பின் மூலம் பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். அத்துடன் பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்களுடன் அரசு உள்ளது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். இந்த இரு வங்கிகளையும் இணைப்பதன் மூலம் சிறிய தொகையை முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் நிச்சயமாகப் பயன் அடைவார்கள்” எனக் கூறி உள்ளார்.