சென்னை:

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்க வேல் ஓய்வுபெற்ற நிலையில், புதிய ஐ.ஜி. அன்பு தலைமையில் இன்று  சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி. அன்பு வெளிநாட்டிலுள்ள சிலைகளை மீட்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் நவம்பர் 30ந்தேதியுடன்  முடிவடைந்த நிலையில், தமிழக அரசு ஐஜியாக, அன்புவை நியமனம் செய்தது.

இதைத்தொடர்ந்து, இன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் ஆலோசனை கூட்டம் கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டம் கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் தலைமையில் நடைபெற்றது. இதில்,புதிய ஐஜி அன்பு, எஸ்பி ராஜேஸ்வரி, மற்றும் 6 ஏ.டி.எஸ்பிக்கள், 12 டிஎஸ்பிக்கள் பங்கேற்றனர்.

அப்போது, ஏற்கனவே  பொன்.மாணிக்கவேல் டீமில்,  யார் யார் எந்தெந்த சிலை கடத்தல் வழக்குகளை கையாண்டார்கள்? அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன? வழக்கு தொடர்பாக என்னென்ன ஆவணங்கள் உள்ளன? என்பது குறித்தும், சில கடத்தல் வழக்குகள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி. அன்பு, நிலுவையிலுள்ள வழக்குகள் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும்,  பொன்.மாணிக்கவேலிடமிருந்து முழுமையான ஆவணங்கள் கிடைக்கவில்லை என்றவர், வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதற்கு சில நிறுவனங்களை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் கூறினார்.