நியூயார்க்:
நிலவின் தென்துருவ ஆராய்ச்சிக்காக சந்திரயான்-2 விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர், அங்கு திடீரென விழுந்து நொறுங்கிய நிலையில், அதனுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை இந்தியா, அமெரிக்கா உள்பட சில நாடுகள் தங்களது விண்கலம் மூலம் தேடி வந்தது. இந்த நிலையில், விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கிய இடத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கண்டுபிடித்து இருப்பதாக தெரிவித்து உள்ளது.
நிலவின் தென் முனையை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி விண்ணில் பாய்ந்தது. இது நிலவின் சுற்றுவட்டப்தைக்குள் சென்றதைத் தொடர்ந்து, அதில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை நிலவில் தரையிறக்கும் பணிகடந்த செப்டம்பர் மாதம் 7ந்தேதி பரபரப்பாக நடைபெற்று வந்தது.
அப்போது விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு 400 மீட்டர் தூரத்தில், பூமியுடனான கட்டுப்பாட்டை விக்ரம் லேண்டர் இழந்தது இதனால், விஞ்ஞானிகள் இடையே பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தரையிறங்க நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் லேண்டர் கட்டுப்பாட்டை இழந்து நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியது.
விக்ரம் லேண்டரில் இருந்து கிடைக்கும் சமிக்ஞை 14 நாட்களுக்கு மட்டுமே இருக்கும் என்பதால் அதனைக் கண்டுபிடிக்க சந்திராயன் 2 மூலம் கடும் முயற்சிகளை இஸ்ரோ மேற்கொண்டது . அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் விக்ரமை தேடும் பணியில் ஈடுபட்டது.
இந்த நிலையில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் போது விழுந்து நொறுங்கிய இடத்தில் காணப்பட்ட சிதறல்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட பள்ளங்களை எஸ் என்ற குறியீட்டுடன் சண்முக சுப்பிரமணியன் என்பவர் கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது. உளவு கேமரா பிரிவில் பணியாற்றும் அவரைப் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.
விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தில் இருந்து வடமேற்கு திசையில் சுமார் 750 மீட்டர் தூரம் வரையிலும் இதன் சிதறல்கள் விழுந்து கிடப்பதையும் அவர் கண்டறிந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இதையடுத்து விக்ரம் லேண்டரின் சிதறல்களை புகைப்படம் எடுத்துள்ள நாசா தற்போது அதனை வெளியிட்டுள்ளது. இதில் பச்சைப் புள்ளிகள் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் சிதறிக் கிடப்பதையும், நீல நிறப் புள்ளிகள் விழுந்த போது மண்ணில் உண்டான பள்ளங்களைக் குறிப்பதாகவும் நாசா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.