டில்லி

நாடாளுமன்ற பெண் காங்கிரஸ் உறுப்பினர்களை அவைக்காவலர்கள் பிடித்து இழுத்து வெளியே தள்ளியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநில அரசியலில் பல குழப்பங்கள் நடந்து வருகின்றன.    தேர்தலில் கூட்டணி சேர்ந்து வென்ற பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் முதல்வர் பதவி பங்கீட்டினால் ஆட்சி அமைக்க முடியாமல் இருந்தன.   இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட சிவசேனா கட்சி, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றது.

இந்நிலையில் திடீரென பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித்பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றது அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.   இதை எதிர்த்து இம்மூன்று கட்சிகளும் தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த விவகாரம் தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரிலும் எதிரொலித்தது   எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை மற்றும் மக்களவையில் சரமாரியாகக் கேள்விகள் எழுப்பினர்.   காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் கைகளில் ஜனநாயகத்தைக் காப்போம், அரசியல் அமைப்பு சட்டத்தைக் கொலை செய்யாதீர் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர்.

அவர்கள் இந்த பதாகைகளுடன் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டுள்ளனர்.  அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர் ஜோதிமணி மற்றும் கேரளாவைச் சேர்ந்த ரம்யா அரிதாஸ் இருவரையும் அவைக் காவலர்கள் வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்து வெளியே தள்ளியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவைக்காவலர்கள் பெண் என்றும் பாராமல் இவர்களை வன்முறையாகப் பிடித்து இழுத்துத் தள்ளியதாகக் கூறிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சபாநாயகரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.   காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி, “ரம்யா அரிதாசையும் என்னையும் அவைக்காவலர்கள் பிடித்து இழுத்து வெளியே தள்ளினார்கள்.   நாங்கள் இது குறித்து சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளோம்” எனக் கூறி உள்ளார்.